நாகை: துப்பாக்கியால் சுட்டு கடற்படை வீரர் தற்கொலை


நாகை: துப்பாக்கியால் சுட்டு கடற்படை வீரர் தற்கொலை
x

நாகையில் கடற்படை முகாம் அலுவலக வாசலில் துப்பாக்கியால் சுட்டு கடற்படை வீரர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாகை ஆரியநாட்டு தெருவில் இந்திய கடற்படை முகாம் அலுவலகம் உள்ளது. கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்க இந்த முகாம் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கடற்படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். இதைப்போல கடற்படை முகாம் அலுவலக வாசலில் சுழற்சிமுறையில் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் கடற்படை வீரர்கள் பணியாற்றுவார்கள்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி குப்பத்தைச் சேர்ந்தவர் உத்தர். இவருடைய மகன் ராஜேஷ் (வயது28). நாகை கடற்படை பிரிவில் பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாகை இந்திய கடற்படை அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நேற்று அதிகாலை 3.20 மணியளவில் கடற்படை அலுவலக வாசலில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ராஜேஷ் தான் வைத்திருந்த 'இன்சாஸ்' ரக துப்பாக்கியால் தனது தலையின் வலது புறத்தில் தன்னைத்தானே சுட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் உடல் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டு அதே இடத்திலேயே உயர் அதிகாரிகள் வரும் வரை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பாிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரணம் என்ன?

ராஜேஷ் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி இந்திய கடற்படையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் நாகை கடற்படை பிரிவில் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், ஹிமாலயா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் ராஜேசின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜேஷ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இது குறித்து சென்னையில் உள்ள இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story