கிடப்பில் போடப்பட்ட நாகை புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகள்


கிடப்பில் போடப்பட்ட நாகை புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகள்
x

கிடப்பில் போடப்பட்ட நாகை புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகள்

நாகப்பட்டினம்

கிடப்பில் போடப்பட்ட நாகை புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மிக சுற்றுலா தலம்

நாகை மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்டவை அமைந்த மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதற்காக வேளாங்கண்ணி- திருச்சி, காரைக்கால்- தஞ்சாவூர், காரைக்கால்-திருச்சி 2 பயணிகள் ரெயில் என மொத்தம் 4 பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல காரைக்கால்- எர்ணாகுளம், காரைக்கால்- சென்னை இடையே தினந்தோறும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் வாராந்திர ரெயிலாக காரைக்கால்- மும்பை, வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ஆகிய ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே நாகை மாவட்டத்திற்கு ரெயில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

பழமையான நாகை ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் நிலைய மேலாளர் டிக்கெட் பரிசோதகர் ஆகியோருக்கான அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறை, கேண்டீன், கட்டண கழிவறை, கட்டண ஓய்வறை வசதிகளுடன் நாகை ரெயில் நிலையம் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ெரயில் நிலைய வளாகத்துக்குள் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எந்த பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது.

கிடப்பில் போடப்பட்டது

நிதி ஒதுக்கி பல மாதங்கள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ள நாகை புதிய ரெயில் நிலையம் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நாகூர் நாகை ெரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். சுற்றுலா பயணிகள் வேலைக்கு சென்று வருபவர்களும் நாகை ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த நாகை ரெயில் நிலையத்தை ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டிடங்கள் கட்டி மேம்படுத்த ரூ.3 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது நாள் வரை எந்தப்பணிகளும் தொடங்கப்படவில்லை. நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

நாகை ரெயில் நிலையம் மேற்கூரை கஜா புயலின் மீது சேதம் அடைந்து விட்டது. இதனால் மழையில் நனைந்தபடி பயணிகள் நின்று கொண்டிருக்கும் சூழல் உள்ளது. மேலும் கழிவறை கட்டிடங்கள் இருந்தும் அது முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் நாகை ரெயில் நிலையத்துக்கு வரும் பெண் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாகை புதிய ரெயில் நிலைய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ெரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகை ரெயில் நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story