தனக்குத்தானே ரூ.1,000 அபராதம் விதித்துக்கொண்ட நாகை சப்-இன்ஸ்பெக்டர்
நாகையில், ‘ஹெல்மெட்’ அணியாததை போலீஸ் சூப்பிரண்டு சுட்டிக்காட்டியதால், தனக்குத்தானே சப்-இன்ஸ்பெக்டர் ரூ.1,000 அபராதம் விதித்துக்கொண்டார்.
நாகையில், 'ஹெல்மெட்' அணியாததை போலீஸ் சூப்பிரண்டு சுட்டிக்காட்டியதால், தனக்குத்தானே சப்-இன்ஸ்பெக்டர் ரூ.1,000 அபராதம் விதித்துக்கொண்டார்.
அபராதம்
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் 'ஹெல்மெட்' (தலைக்கவசம்) அணிய வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
நகரின் பல்வேறு இடங்களில் நின்றபடி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் 'ஹெல்மெட்' அணிந்துள்ளனரா? என போலீசார் கண்காணித்து வருவதும், அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிப்பதும் தொடர்ந்து நடக்கிறது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் 'டார்கெட்' நிர்ணயித்து அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு சுட்டிக்காட்டினார்
மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசாரும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்று 'வாக்கி- டாக்கி' மூலம் அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த 'வாக்கி-டாக்கி' தகவலை நாகை வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் என்பவர் 'ரிசீவ்' செய்து, கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிந்து செல்வதாக பதில் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ரோந்து சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதை கவனித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அவருடைய தவறை சுட்டிக்காட்டி விதிகளின்படி 'ஹெல்மெட்' அணிந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
தனக்குத்தானே அபராதம்
இதையடுத்து தனது தவறை உணர்ந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், கடமை தவறாமல் தனக்குத்தானே ரூ.1,000 அபராதம் விதித்து ரசீது போட்டுக்கொண்டார்.
நாகையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் 'ஹெல்மெட்' அணியாததற்கு தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டது பேசுபொருளாக மாறியது.