நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைத்திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜா கோவில். இது நாகர் வழிபாட்டுக்கு என தனியாக அமைந்த கோவில் என்பது சிறப்பம்சம் கொண்டது. களக்காடு பகுதியை ஆண்டுவந்த வீரஉதய மார்த்தாண்டன் என்ற மன்னன் தோல்நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவர் நாகர்கோவிலில் உள்ள நாகராஜரை வழிபட்டு பூரண குணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
இங்கு மூலவர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சிதருகிறார். நாகராஜர் இருக்கும் கருவறை 2 அறைகளை கொண்டது. அதில் ஒன்று ஓலைக்கூரையால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நாகராஜா கோவில் தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் நம்பூதிரி நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி தலைமையில் கோவில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். பின்னர் கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், சுவாமி பத்மேந்திரா, கோவில் மேலாளர் ராமச்சந்திரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுரேந்திர குமார் மற்றும் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால் ஊற்றி வழிபாடு
கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். மாலையில் மங்கள இசை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தன. இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. கொடியேற்று விழாவையொட்டி நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருவிழா வருகிற 6-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் புஷ்ப விமானம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், இன்னிசை கச்சேரிகள், சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் போன்றவை நடக்கின்றன.
தேரோட்டம்
9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலையில் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கோவிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8.10 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.