பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர்
பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை நாகர்கோவில் வாலிபர் கரம் பிடித்தார். தமிழக கலாசாரம் வெகுவாக கவர்ந்ததாக மணமகள் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை நாகர்கோவில் வாலிபர் கரம் பிடித்தார். தமிழக கலாசாரம் வெகுவாக கவர்ந்ததாக மணமகள் தெரிவித்தார்.
கடல் கடந்த காதல்
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி மெர்சி. இவர்களுடைய மகன் ஜெமி ரென்ஸ்விக் (வயது 25). எம்.பி.ஏ. பட்டதாரி.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா-மெரிட்டா ஜமீலா தம்பதி மகள் லாலைன் (23), பட்டதாரி.
லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
காதல் அனுபவம்
இந்த கடல் கடந்த காதல் கைகூடியது குறித்து மணமகளிடம் கேட்டபோது அவர் புன்முறுலுடன் பேசினார். அப்போது கூறியதாவது:-
எனது தந்தை பிலிப்பைன்சில் ஒரு ஆலயத்தில் நிர்வாகியாக உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெமி ரென்ஸ்விக்கின் தந்தை எங்களது நாட்டிற்கு வந்தார். அப்போது அவர் எனது தந்தையை சந்தித்து ஆலய நிர்வாகம் தொடர்பாக பேசினார். பின்னர் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
இந்த நட்பு, இருவீட்டாருக்கும் இடையேயும் மலர்ந்து நெருக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நான் எனது தந்தை மற்றும் தாயாருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தோம். இதற்காக ஜெமி ரென்ஸ்விக்கின் வீட்டில் தங்கினோம். அப்போது தான் எனக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் நானும் எனது குடும்பமும் மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று விட்டோம். ஆனால் அதன் பிறகு நானும், ஜெமி ரென்ஸ்விக்கும் செல்போனில் பேசியும், வீடியோ கால் மூலமும் நட்பை வளர்த்தோம். அப்போது இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டோம்.
நாளைடவில் அதுவே எங்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மலர்ந்தது. 4 ஆண்டாக காதலித்தோம்.
காதல் கைகூடியதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும் தமிழக கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்து போனது. இதனை சுற்றுலாவுக்கு கன்னியாகுமரிக்கு வந்த போது உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரது வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மணமகள் உறவினர்கள் சிலர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.