நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை - மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை - மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் புகார்

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், குமரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்தனர். அந்த புகாரில், காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த புகார்கள் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த வகையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

பல பெண்களின் வாழ்க்கையின் சீரழித்ததாக காசி மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவருடைய நண்பர் ஒருவரையும் கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவருடைய தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார்.

காசி மற்றும் அவருடைய தந்தை தங்க பாண்டியன் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தங்கபாண்டியனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் காசி 3 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருந்தார்.

கோர்ட்டு விசாரணை

அதாவது அவர் மீதான 8 வழக்குகளில் 7 வழக்குகளுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து சிறையில் காலத்தை கழித்தார்.

இதற்கிடையே காசி மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகள் நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. ஒரு வழக்கு போக்சோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது.

காசிக்கு சாகும் வரை சிறை

இதில் 22 வயது இளம்பெண் பலாத்காரம் தொடர்பாக மகிளா கோர்ட்டில் நடந்து வந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசியை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் காசியை குற்றவாளி என்று நீதிபதி ஜோசப் ஜாய் அறிவித்தார். இளம்பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.


Next Story