நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய மருத்துவமனையாக கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூரில் 1981-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் ரால் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை திறக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளை நெருங்க உள்ள நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை தற்போது பழுதடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவ சேவை குறித்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சரிடம் நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் புதிய மருத்துவமனை கட்டுவது குறித்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பழுதடைந்த நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை விரைந்து புதிய மருத்துவமனையாக கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து சுற்றுலாத்தலமாக விளங்கும் நாகூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.