நகை வாங்குவது போல் நடித்து பணம், 2 பவுன் கொள்ளை


நகை வாங்குவது போல் நடித்து பணம், 2 பவுன் கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தையில் நகை வாங்குவது போல் நடித்து பணம், 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தையில் நகை வாங்குவது போல் நடித்து பணம், 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நகை கடை

திங்கள்சந்தை அருகே உள்ள பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராமையன் (வயது65). இவர் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கருணாநிதி கடையில் இருந்த போது 2 வாலிபர்கள் நகை வாங்க வந்தனர். அவர்களில் ஒருவர் ராசிக்கல் கேட்டார்.

உடனே கருணாநிதி ராசி கல் எடுத்து கொடுப்பதற்காக திரும்பினார். அப்போது, மற்றொரு வாலிபர் மேஜை டிராயரை திறந்து அதில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தார்.

பின்னர் கருணாநிதி ராசிக்கல்லை எடுத்து காட்டியதும், இருவரும் அதற்கான பணத்தை கொடுத்து வாங்கி சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

சிறிது நேரம் கடந்த பின்னர் கருணாநிதி மேஜை டிராயரை பார்த்த போது அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் பணம், நகையை கொள்ளையடித்து சென்றதை அறிந்த கருணாநிதி அவர்களை அந்த பகுதியில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நகை வாங்குவதுபோல் நடித்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story