முருகனை பார்த்து நளினி கண்ணீர் 'பொதுவாழ்க்கைக்கு வரப்போவதில்லை' என பேட்டி
வேலூர் சிறையில் இருந்து விடுதலையான முருகனை பார்த்து நளினி கண்ணீர் மல்க கை கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில் பொதுவாழ்க்கைக்கு இனி வரப்போவதில்லை என தெரிவித்தார்.
காட்பாடி
வேலூர் சிறையில் இருந்து விடுதலையான முருகனை பார்த்து நளினி கண்ணீர் மல்க கை கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில் பொதுவாழ்க்கைக்கு இனி வரப்போவதில்லை என தெரிவித்தார்.
நளினி விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நளினியை விடுதலை செய்வதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறைக்கு நேற்று காலை கிடைக்கவில்லை. அதனால் பரோல் நடைமுறைப்படி நளினி பலத்த காவலுடன் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை சென்று கையெழுத்திட்டார். பின்னர் மீண்டும் பிரம்மபுரம் வீட்டிற்கு சென்றார். மதியத்துக்கு மேல் விடுதலை செய்யப்பட்டதற்கான சுப்ரீம் கோர்ட்டு ஆணை வேலூர் மத்திய சிறைக்கு வந்தது.
அதனை தொடர்ந்து நளினியை அவர் தங்கியிருந்த பிரம்மபுரம் வீட்டிலிருந்து பலத்த காவலுடன் போலீசார் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் நிறைவடைந்து மாலை 4.55 மணிக்கு நளினி விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயில் வாசலில் வைத்து நளினியை, அவருடைய சகோதரர் பாக்கியநாதன் வரவேற்றார். அங்கிருந்து நளினி மத்திய ஆண்கள் ஜெயலிலுக்கு கணவர் முருகன் விடுதலை செய்யப்படுவதை காண்பதற்காக காரில் சென்றார்.
நளினியை ஆறுதல் படுத்திய முருகன்
முருகன், சாந்தன் ஆகியோர் மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். நளினி கண்ணீர் மல்க கை கொடுத்து முருகனை வரவேற்றார். அப்போது முருகன் நளினியின் தலையின் மேல் கை வைத்து ஆறுதல்படுத்தினார்.
இதையடுத்து ஜெயில் வளாகத்தை விட்டு வெளியே வந்த நளினி நிருபர்களிடம் கூறுகையில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானதும், எனது கணவர் முருகன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததை கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து நளினி அங்கிருந்து தனது சகோதரர் பாக்கியநாதனுடன் காரில் புறப்பட்டு பிரம்மபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் முருகன், சாந்தன் ஆகியோரை காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் திருச்சி ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு வேனில் அழைத்து சென்றனர்.
முதல்முறையாக கொண்டாடிய நளினி
நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் இருந்ததால் பொங்கலையோ, தீபாவளியையோ இதுவரை கொண்டாடியது இல்லை.
ஆனால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய தாயாரை பார்த்துக் கொள்வதற்காக பரோலில் வெளியே வந்து நளினி இருந்ததால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலையும், கடந்த மாதம் தீபாவளியையும் வெளியே இருந்து கொண்டாடினார். இனிமேல் அவர் சுதந்திரப்பறவை என்பதால் தன்னுடைய கணவர் முருகன் மற்றும் குடும்பத்தாருடன் பொங்கலையும், தீபாவளியையும் கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
விடுதலையானதை தொடர்ந்து நளினி காட்பாடியில் தான் தங்கி இருந்த பிரம்மபுரம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒவ்வொருவரும் எங்களுக்கு உதவி செய்துள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எங்களுடைய விடுதலைக்கு உதவிய மத்திய- மாநில அரசுகளுக்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள். விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்பத் தலைவியாக...
தமிழ் மக்கள் எங்களை 31 ஆண்டுகள் மறக்காமல் எங்கள் பின்னால் வந்து ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எப்படி வார்த்தையால் நன்றி சொல்வது என தெரியவில்லை. மிக்க நன்றிகள்.
நான் பொது வாழ்க்கைக்கு வர விரும்பவில்லை. ஒரு குடும்ப தலைவியாகத் தான் இருக்கப் போகிறேன். என்னுடைய குடும்பம், என்னுடைய குழந்தை, என்னுடைய கணவர். இவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கை.
இவ்வாறு அவர் கூறினார்.