நல்லேர் பூட்டி விளைநிலத்தை வழிபட்ட விவசாயிகள்


நல்லேர் பூட்டி விளைநிலத்தை வழிபட்ட விவசாயிகள்
x

நல்லேர் பூட்டி விளைநிலத்தை விவசாயிகள் வழிபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை புத்தாண்டையொட்டி நேற்று ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து விளை நிலத்தில் வழிபட்டனர். அதன் பின்னர் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும், பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது. இக்கிராமத்தை பொறுத்தவரையில் அனைத்து விவசாயிகளும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டிய பின்னர் மற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலத்தில் விவசாய பணிகளை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை கொண்டு நல்லேர் பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். காலப்போக்கில், போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்து விட்டனர். இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி உழவு செய்ய தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.


Next Story