நமையூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
நமையூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மன் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் அலகு குத்தினர். மதியம் தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னதாக அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் நமையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தினை கண்டுகளித்ததோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.