நாமக்கல் விழாக்கோலம் பூண்டது: உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டு மேடையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்


நாமக்கல் விழாக்கோலம் பூண்டது:  உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டு மேடையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
x

நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டு மேடையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

நாமக்கல்

நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டு மேடையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

பிரமாண்ட பந்தல்

நாமக்கல்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதையொட்டி பிரமாண்ட மேடை மற்றும் 400 அடி நீளம் 240 அடி அகலத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆங்காங்கே கட்சி கொடிகள் கட்டப்பட்டு நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் மாநாட்டு திடலின் நுழைவுவாயிலில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் (ரிப்பன் பில்டிங்) வடிவில் முகப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தார். தொடர்ந்து அவர் நாமக்கல் சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

மேடையை பார்வையிட்டார்

பின்னர் மாலை 6.30 மணியளவில் நாமக்கல் அருகே பொம்மைகுட்டை மேட்டில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநாட்டு திடலின் முகப்பு, மாநாட்டு மேடை மற்றும் மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட பந்தல், இருக்கைகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

மேலும் மாநாட்டையொட்டி மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, மதிவேந்தன், கே.ஆர்.என்‌.ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது கொங்குநாட்டின் பாரம்பரிய நடனங்களான வள்ளி கும்மியாட்டம் மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.

டீ குடித்தார்

முன்னதாக, மாநாட்டு திடலை பார்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது வழியில் திடீரென சிலுவம்பட்டி அருந்ததியர் குடியிருப்புக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக அவர் 3 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வி படித்து வரும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து அங்குள்ள ஓமியோபதி டாக்டர் ஜெயபிரகாஷ் என்பவர் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து டீ குடித்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கல்வி குறித்த விவரங்களையும், அக்குடியிருப்பில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவரிடம் டாக்டர் ஜெயபிரகாஷ், தனது மனைவி தரணிபிரபா பி.எஸ்.சி., பி.எட் படித்து முடித்து தற்போது எம்.எஸ்.சி முடிக்கும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் குடியிருப்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை குறித்தும் முதல்-அமைச்சர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு அறிவுரை

தொடர்ந்து, கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் கவின் என்ற மாணவனுடனும், புதுக்கோட்டையில் மருத்துவம் படித்து வரும் தாரணி என்ற மாணவியுடனும் உரையாடிய முதல்-அமைச்சர் அவர்களது மேற்படிப்பு குறித்து கேட்டறிந்து, கல்வி தான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம், யாராலும் அழிக்க முடியாதது கல்வி தான். எனவே நன்கு உயர்கல்வி படித்து சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும் சேவை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனி என்பவரது வீட்டிற்கு சென்று அவரது பேத்தி சமிக்ஷாவிடம் அவரது படிப்பு குறித்து கேட்டார், அதற்கு அந்த மாணவி 10-வகுப்பு படித்து வருவதாக தெரிவித்தார். நன்கு படித்து உயர்கல்வி பயில வேண்டுமென்றும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் அப்பகுதி பொதுமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் ஸ்ரேயாசிங், ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story