நெற்றியில் நாமம் போட்டு மனு கொடுத்த வார்டு உறுப்பினர்கள்
நெற்றியில் நாமம் போட்டு மனு கொடுத்த வார்டு உறுப்பினர்கள்
பெருமாநல்லூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் காசிராஜன், 4-வது வார்டு உறுப்பினர் பத்மாவதி, 7-வது வார்டு உறுப்பினர் கவிதாவின் கணவர் மகேந்திரன் ஆகியோர் நேற்று நெற்றியில் நாமம்போட்டபடி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பெருமாநல்லூர் ஊராட்சியில் ஆர்.ஓ. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.12 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பொதுமக்களுக்கு இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் ஒருவருக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் பெயரளவுக்கு மிக குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தினமும் ரூ.1,000 மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த பணத்தை ஊராட்சிக்கு செலுத்தாமல் எடுத்து செல்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்த்திருவிழாவின்போது குப்பை அகற்றிய வகையில் முறைகேடாக லட்சக்கணக்கில் பில் கொடுத்ததாக தலைவர், துணைத்தலைவர் மீது புகார் எழுந்துள்ளது. அரசு உத்தரவுப்படி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் வணிகம் செய்து வரும் கடைகளுக்கு முறைகேடாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
15-வது நிதிக்குழு மூலம் நிதிபெற்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இலவச கழிப்பிட வசதியை பொதுமக்கள் பயன்பெற முடியவில்லை. மாறாக கட்டண கழிப்பிடம் என மாற்றி மக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள். அதை இலவச கழிப்பிடமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.