நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்
நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கூடக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டிபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நம்பியூர் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் தூய்மை பணி சரியாக நடைபெறுவதில்லை. குடிநீர் வினியோகம் செய்ய பயன்படும் பம்பு செட்டுகள், கழிவுநீர் வடிகால் பராமரிக்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்கள் ஏதும் கூடக்கரை-தொட்டிபாளையம் கிராமங்களுக்கு வழங்கப்படுவது இல்லை. எனவே தூய்மை பணி சரியாக நடைபெறவும், பம்பு செட்டுகள், கழிவுநீர் வடிகாலை பராமரிக்கவும், புதிய திட்டங்கள் எங்கள் பகுதியில் நடைபெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அதற்கு போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம், 'தொட்டிபாளையம் பகுதியில் குடிநீர் வழங்கவும் மற்றும் தூய்மை பணிகள் சரிவர நடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.