ஆழ்வார்திருநகரியில் நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம்


ஆழ்வார்திருநகரியில் நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம்
x

ஆழ்வார்திருநகரியில் நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு நேற்று நவதிருப்பதி பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்த வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களையும், நம்மாழ்வாரையும் தரிசனம் செய்தனர்.

பிரமோட்சவம்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவத்திருப்பதி தலங்களில் 9-வதுதலமாக அமைந்துள்ளது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில். இங்கு ஆதிநாதர் பெருமாளுக்கு வருடத்தில் 2 முறை திருவிழாவும், நம்மாழ்வாருக்கு வருடத்தில் 2 முறை திருவிழாவும் நடைபெறும். இங்குள்ள புளியமரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி பாடினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமோட்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மங்களாசாசனம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் நாளான நேற்று மங்களாசாசனத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், நத்தம் எம்இடர்கடிவான், இரட்டை திருப்பதி தேவப்பிரான் மற்றும் அரவிந்தலோசனர், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளுர் வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான் ஆகிய 9 பெருமாள்களும் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி கொடுக்கும் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்மாழ்வாரையும், மதுரகவி ஆழ்வாரையும், 9 நவத்திருப்பதி பெருமாள்களையும் தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 8 பெருமாள் கோவில்களில் உள்ள கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. நேற்று இரவில் 9 பெருமாள்களின் கருடசேவையும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கப்பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. வருகின்ற 11-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். மறுநாள் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story