கடந்த ஓர் ஆண்டில் 130 டி.எம்.சி. தண்ணீர் வீணானது:நந்தன் கால்வாய் திட்டம் முழுமைபெற தென்பெண்ணையாறு இணைப்பு அவசியம்இரு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
நந்தன் கால்வாய் திட்டம் முழுமைபெற தென்பெண்ணையாறு இணைப்பு அவசியம் என்று இரு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனா்.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் பருவம் தவறிய மழைப்பொழிவு என்று வானிலையில் எண்ணற்ற எதிர்வினை மாற்றங்களை சந்தித்து வருகிறோம். இதுபோன்ற இயற்கைக்கு முரண்பாடான காலக்கட்டத்தில், அவ்வப்போது வரும் வான்மழையை சேமித்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக்கொள்வது அவசியமானது. ஆதலால் தான் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது என்பது காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது. அதை உணர்த்துவதுதான் தென்பெண்ணை ஆறு-நந்தன்கால்வாய் இணைப்பு திட்டமாகும்.
நந்தன்கால்வாய்!
இதுவெறும் கால்வாய் அல்ல. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நூற்றாண்டு கால கனவு திட்டம். நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதரமாக திகழ்வது துரிஞ்சல் ஆறு.
திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் இந்த ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு, அங்கிருந்து வாய்க்கால் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு பாசனத்துக்கு தண்ணீர் கொண்டுவருவதே இத்திட்டத்தின்நோக்கம்.
சேதத்துக்கு உள்ளான கால்வாய்
இதன் மூலம் திருவண்ணாமலை தாலுகாவில் 14 ஏரிகளுக்கும், செஞ்சி தாலுகாவில் 10 ஏரிகளுக்கும், விழுப்புரம் தாலுகாவில் 12 ஏரிகள் என்று மொத்தம் 36 ஏரிகளுக்கு நீர் ஆதரமாக இருப்பது நந்தன் கால்வாய் ஆகும். இரு மாவட்டங்களின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கக்கூடிய நந்தன் கால்வாய் திட்டம் இன்னும் முழுமையடையாதது தான் இந்த பகுதி விவசாயிகளின் வருத்தத்துக்குறிய ஒன்றாகும். ஏனெனில் கடந்த 1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட எதிர்பாராத புயல் மழையால் இந்த கால்வாய் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இதனால் அதன் பாசனப்பரப்புகளுக்கு முழுமையாக தண்ணீர் வழங்க இயலாத நிலைக்கு கால்வாய் தள்ளப்பட்டது.
35 ஆண்டுகால கோரிக்கை
இதையடுத்து விவசாயிகளின் 35 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, கால்வாயை சீரமைக்க கடந்த 2013 ஜூலையில் நீர்வள நிலவள கூடுதல் திட்டத்தின் கீழ் 14 கோடியே 30 லட்சம் ரூபாயும், அதன்பின்னர் 2019-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர்கள் மூலம் ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சீரமைப்பு பணிகள் முழுமை பெற்று 2022-ம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் மூலம் கடந்த ஆண்டு வாய்க்காலில் தண்ணீர் வரத்தும் தொடங்கியது. இவ்வாறு பணிகள் முழுமையாக நடந்த போதிலும், இன்னும் கூடுதலாக செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.
துரிஞ்சலாறின் நீர் ஆதாரம்
அதாவது, கீரனூர் அணை அமைந்துள்ள துரிஞ்சலாற்றுக்கு நிலையான நீர் ஆதாரம் கிடையாது. மழைக்காலத்தில் மட்டுமே அந்த அணையில் இருந்து தண்ணீர் பெற முடியும். எனவே நந்தன்கால்வாய் சீரமைப்பு திட்டத்துடன் தென்பெண்ணையாறு துறிஞ்சலாறு இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் மறுப்பக்கம் உள்ளது.
தென்பெண்ணையாற்றில் வீணான தண்ணீர்
கர்நாடகமாநிலத்தில் நந்தி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் இந்த தென்பெண்ணை ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 கி.மீ., விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 106 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலூரில் வங்க கடலில் தண்ணீர் கலந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 130 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்து இருக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 0.86 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து இருக்கிறது.
இதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த 3 தடுப்பணைகள் சேதம் மற்றும் தண்ணீரை சேமிக்க போதிய கட்டமைப்புகள் நம்மிடையே இல்லாதது தான்.
அவசியமான திட்டம்
இதுபோன்ற வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்கு நந்தன்கால்வாய்-தென்பெண்ணை ஆறு போன்ற இணைப்பு திட்டங்களும் அ வசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 130 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி இருப்பது என்பது அடுத்த 3 ஆண்டுகளுக்கு விவசாயத்துக்கு தேவையான நீரின் அளவாகவே பார்க்கப்படுகிறது.
எனவே இதுபோன்ற நிலை இனியும் ஏற்படாமல் தடுக்க, நந்தன்கால்வாயின் நீர் ஆதரமான துரிஞ்சல் ஆறுக்கு நிலையான நீர் ஆதாரம் கிடைத்திட தென்பெண்ணை ஆறு இணைப்பு திட்டம் என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுவதுடன், நந்தன்கால்வாய் திட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது காலத்தின் கட்டாயமாகவே மாறி உள்ளது.
சட்டசபையில் அறிவிப்பு?
எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற இந்த சட்டசபை கூட்ட தொடரில், அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்பதே இரு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதேபோன்று தற்போதுள்ள நந்தன்கால்வாயில் கரைப்பகுதியில் தார் சாலை அமைப்பது, கால்வாயில் சிமெண்டு போடுவது என்று கால்வாய் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோாிக்கையையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
பாசன பகுதியை விரிவுபடுத்துதல்
இதுகுறித்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கதலைவர் அன்பழகன் கூறியதாவது:-
நந்தன் கால்வாயின்-தென்பெண்ணையாறு அணை இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும். நந்தன் கால்வாயின் விடுபட்ட பகுதிகளை சீரமைக்கப்பட வேண்டும். சோகுப்பம்பொத்தேரி முதல் கணக்கன் குப்பம் வரை வனப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும்.
ஒரு கரையை தார் சாலையாகவும், விவசாயிகள் இரண்டு பக்கமும் செல்ல தேவையான இடங்களில் சிறுபாலம் அமைத்தல் மற்றும் பழைய நந்தன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு பருவமழை மூலம் நந்தன்கோவில் ஆயக்கட்டு இல்லாத பல ஏரிகள் இயற்கையாக நிறைந்தன நந்தன் கால்வாய் தண்ணீர் மூலம் அப்படி நிறைந்த ஏரிகளை நந்தன் கால்வாய் ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும் பாசன பகுதியை விரிவு படுத்த வேண்டு என்றார்.
பராமரிப்பு பணிகள்
கணக்கன் குப்பத்தை சேர்ந்த விவசாயி முருகன்:-
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனவே இத்திட்டம் மீண்டும் பழுதடையாமல் நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்றால் இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தென்பெண்ணை ஆறு நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் எங்களுக்கு நிரந்தர விவசாய வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.