நன்னாடு அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் மீண்டும் சாதனை
ஊரக திறனாய்வு தேர்வில் நன்னாடு அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் மீண்டும் சாதனை
விழுப்புரம்
ஆண்டுதோறும் 9-ம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு அத்தேர்வில் மாவட்டந்தோறும் தேர்ச்சி பெறும் முதல் 50 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அரசு உயர்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் சு.கோகுலகிருஷ்ணன் மாவட்ட அளவில் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்விலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர் சூரியமூர்த்தி என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விலும், ஊரக திறனாய்வுத்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர் என்பது சிறப்பம்சமாகும். மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் மாவட்ட அளவில் 2-ம் இடமும், பூங்குழலரசன் மாவட்ட அளவில் 3-ம் இடமும், பிரவீன்குமார் 7-ம் இடமும் பிடித்து தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்களை பள்ளியின் தலைமைஆசிரியர் வே.கற்பகாம்பிகை மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.