குறுகலான சாலை...பள்ளமான ஓரங்கள்...அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்


குறுகலான சாலை...பள்ளமான ஓரங்கள்...அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்
x

குறுகலான சாலையில் ஓரங்கள் பள்ளமாகிக் கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே குறுகலான சாலையில் ஓரங்கள் பள்ளமாகிக் கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மண் அரிப்பு

மடத்துக்குளத்திலிருந்து கணியூர், காரத்தொழுவு வழியாக தாராபுரம் செல்லும் முக்கிய சாலை உள்ளது.இந்த சாலை வழியாக விவசாய பணிகளுக்காக செல்லும் டிராக்டர்கள், அறுவடை எந்திரங்கள், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான கனரக வாகனங்கள் உட்பட தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த சாலையில் கணியூர் செக்கான் ஓடை பகுதிக்கு அருகில் சாலை குறுகலாக உள்ளது. மேலும் சாலையின் பக்கவாட்டு பகுதிகளில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகியுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இளைஞர் உயிரிழப்பு

அந்தவகையில் 2 நாட்களுக்கு முன் இந்த சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடைக்கு அருகில் உள்ள பகுதியில் காரத்தொழுவைச் சேர்ந்த டியூசன் மாஸ்டர் கவுதம் என்பவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் முயற்சியில் சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுதமை அருகிலுள்ளவர்கள் மீது உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கவுதம் உயிரிழந்தார்.

இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு சாலை பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இந்த பகுதியில் சாலையோர பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story