நத்தக்காடையூர் கிராமங்கள் சேமூர் சர்க்கரை ஆலையுடன் இணைப்பு
நத்தக்காடையூர் கிராமங்கள் சேமூர் சர்க்கரை ஆலையுடன் இணைப்பு
திருப்பூர்
காங்கயம் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த கரும்பு விவசாய பகுதி, சேமூர் சர்க்கரை ஆலைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு பகுதி விவசாயிகள் ஆதரவும், மற்றொரு பகுதி விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை ஆலையை மாற்றக்கூடாது
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காங்கயம் நத்தக்காடையூர் பகுதி கரும்பு விவசாயிகள் 1968-ம் ஆண்டு முதல் கரும்பு சாகுபடி செய்து கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்த ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்து வருகிறோம். இந்த சாலை சாகுபடி செய்த கரும்புக்கு உரிய காலத்தில் 14 நாட்களுக்குள் ஒரே தவணையில் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கிறார்கள். இந்த நிலையில் நத்தக்காடையூர், பாப்பினி, குட்டபாளையம், பழைய கோட்டை, முள்ளிபுரம் ஆகிய வருவாய் கிராமங்கள், விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் சர்க்கரை துறை ஆணையாளர் உத்தரவுப்படி, சேமூர் பூந்துறை சக்தி சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இதை அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
நாங்கள் புகழூர் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையுடன் இருக்கவே விரும்புகிறோம். நத்தக்கடையூர் பிர்காவுக்கு உட்பட்ட 5 கிராமங்களை சேமூர் பூந்துறை சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
சர்க்கரை ஆலை மாற்றத்துக்கு நன்றி
முள்ளிபுரம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் அளித்த மனுவில், 'நாங்கள் பல வருடங்களாக கரும்பு பயிரிட்டு கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்ந ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்துக்கு அனுப்பி வந்தோம். அந்த நிறுவனம் காலம் கடத்தி கரும்பு அறுவடை செய்ததாலும், காயவிட்டதாலும் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது எங்கள் கிராமத்தை சேமூர் பூந்துறை சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றி உத்தரவிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. எங்கள் பகுதிக்கு அருகில் இருப்பதால் சொந்த வாகனம் மூலமாக கரும்பை கொண்டு செல்ல முடியும். எந்திர அறுவடை அனுபவம் எங்களுக்கு சாகுபடி செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறோம். இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளனர்.
----