நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுஜன நலச்சங்கத்தினர் கோரிக்கை


நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை   சீரமைக்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுஜன நலச்சங்கத்தினர் கோரிக்கை
x

நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுஜன பொதுநலச்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நத்தம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுஜன பொதுநலச்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், "மேலப்பாளையம்- டவுன் பாதை நத்தம் தாமிரபரணி பாலம் மிகவும் பழமையான பாலமாகும். இந்த பாலம் தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பாலத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி அந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும்" என்று கூறி இருந்தனர்.

வேலைவாய்ப்பு

நாம் தமிழர் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், "கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120-க்கும் மேற்பட்டவர்கள் 7 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து உள்ளுர் மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

சாலை பணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை தாலுகா குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள இந்திரா காலனியில் கடந்த ஆண்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சிறிது தூரம் மட்டுமே சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. மற்ற இடங்களில் ஜல்லி கற்களை மட்டும் போட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை முழுமையாக அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதேபோல் பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் கொடுத்தனர்.


Next Story