தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; கனிமொழி எம்.பி. தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; கனிமொழி எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடைபெறும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடைபெறும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாநாட்டில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அறிவியல் அறிவு இல்லையென்றால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. நாம் காணும் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வழிகளை செய்து முடிப்பதற்கு அறிவியல் உதவுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செய்தியை வெளியூர்களில் உள்ளவர்களுக்கு சொல்வதற்கு, ஒரு நபர் ஓடிச் சென்று வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகத்தின் எந்த மூலைக்கும் உடனே செய்தியை அனுப்பலாம்.

புதிய கண்டுபிடிப்பு

அதுபோல் செல்போன் மூலமாக ஒரே கிளிக்கில் உலகத்தில் உள்ள அரிய விஷயங்களையும் தெரிந்துகொள்ளலாம். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே மாணவர்கள் தங்களின் முயற்சியில் தளராது, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாண்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் சந்திரகுமாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகர்பான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story