தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
x

தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு

மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது55). இவரது வீட்டின் மீது கடந்த மாதம் 25-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபாவின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் இலப்பைவிளையை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கானை (27) கைது செய்தனர். அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

வீட்டில் சோதனை

பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ஒரு மடிக்கணினி மற்றும் செல்போன், சிம் கார்டு உள்பட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்த அல்ரசிம் (22) என்ற கல்லூரி மாணவரையும், சாலத்திவிளையை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி ரிஸ்வான் (27) என்பவரையும் மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறான்விளையை சேர்ந்த முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலிமான் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு சட்டம்

இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபர் முஸ்ஸாமில் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்த் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து முஸ்ஸாமில் மீது மண்டைக்காடு போலீசார் தேசிய பாதுகாப்பு சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.


Next Story