தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என 283 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
பேரிடர் மீட்பு ஒத்திகை
இந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் முதல் நிலை மீட்பாளர்கள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பேரிடர் மீட்பு ஒத்திகை மற்றும் மண்சரிவு, மரம் விழுதல் போன்றவற்றின் போது எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து ஊட்டி, குந்தா, குன்னூர் தாலுகாக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோத்தகிரி தாலுகாவில் நாளை (வியாழக்கிழமை), கூடலூர் தாலுகாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), பந்தலூர் தாலுகாவில் வருகிற 12-ந் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந் தேதி நீலகிரியில் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் வினோத், தேசிய பேரிடர் மீட்பு படை துணை ஆய்வாளர்கள் ஹரிதேவ்பந்தர், கஜேந்திர சவுத்திரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.