தொழில் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்பு திட்ட தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்துள்ளார்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்பு திட்ட தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய கொடி ஏற்ற வேண்டும்
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி அனைத்து வீடுகள் மற்றும் கடைகள் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வரை தேசிய கொடியை ஏற்றி வைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
பதிவேற்றம்
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி அணிந்து பணியாற்றவும், வாடிக்கையாளர்களுக்கு தேசிய கொடியை வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து போக்குவரத்து வாகனங்களில் தேசிய கொடியை ஒட்டி வைப்பதோடு வாட்ஸ்- அப் உள்ளிட்ட தகவல் சேவைகளில் தேசிய கொடி சின்னத்தில் புகைப்படம் வைக்க வேண்டும். இந்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வணிக நிறுவனங்களுக்கு முன் விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளை செல்பி படம் எடுத்து https://amritmahotsav.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இது குறித்த தகவல்களை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.