தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்


தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

சுதந்திர தின அமுத பெருவிழா

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவில், மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் சுதந்திர தின அமுத பெருவிழாவில் எவ்வித சாதி பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்களில் தலைமை அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை ஏற்றுபவரை அவமதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அதே போல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்.

சட்டப்படி கடும் நடவடிக்கை

தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து புகார்கள் ஏதேனும் இருப்பின், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை உதவி எண். 1077 அலலது ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story