குமரியில் வழிபாட்டு தலங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது


குமரியில் வழிபாட்டு தலங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
x

குமரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா களை கட்டியுள்ளது. வழிபாட்டு தலங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டன. வீடுகள், சாலைகளிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு பறக்கிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா களை கட்டியுள்ளது. வழிபாட்டு தலங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டன. வீடுகள், சாலைகளிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு பறக்கிறது.

சுதந்திர தின விழா

நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழா இன்று (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. இதற்கிடையே நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பா.ஜனதாவினர் தேசிய கொடியை மொத்தமாக வாங்கி வீடுகள், கடைகளுக்கு வினியோகம் செய்தனர்.

தேசிய கொடி

குமரி மாவட்டத்திலும் பா.ஜனதா சாா்பில் தேசிய கொடி வினியோகம் மும்முரமாக நடந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி ஏற்றி உள்ளனர். அதோடு கடைகளின் முகப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. அதிலும் நாட்டு பற்று அதிகமுடைய சிலர் தங்களது இருசக்கர வாகனத்திலும் தேசிய கொடி கட்டி இருக்கிறார்கள். ஆட்டோக்கள், கார்களிலும் தேசிய கொடி கம்பீரமாக பறக்கிறது.

நாகர்கோவில் மாநகரை பொறுத்த வரையில் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையம், டாஸ்மாக் மதுக்கடைகள், அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி பறப்பதை பார்க்க முடிகிறது. முக்கியமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்கிறது. மேலும் சிறு சிறு கடைகளில் கூட தேசிய கொடியை ஒட்டி இருக்கிறார்கள். கேப் ரோட்டில் நடைபாதையில் உள்ள கைபிடி கம்பியில் கூட தேசிய கொடி கட்டப்பட்டு உள்ளது.

வழிபாட்டு தலங்கள்

இந்த நிலையில் நேற்று வழிபாட்டு தலங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், வடசேரி பள்ளி வாசல், வெட்டூர்ணிமடம் கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களிலும் தேசிய கொடியை முகப்பு புகைப்படமாக வைக்கப்பட்டு வருகிறது. அதாவது வாட்ஸ்அப், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் தங்களது புகைப்படத்தை நீக்கிவிட்டு தேசிய கொடியை புகைப்படமாக வைத்து வருகிறார்கள்.


Next Story