வீடு, கடைகளில் பொலிவின்றி பறக்கும் தேசிய கொடிகள்
சுதந்திர தின பொன்விழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் வீடு, கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகிய பின்னரும் பெரும்பாலான இடங்களில் இவை இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால் கொடிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுதந்திர தின பொன்விழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் வீடு, கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகிய பின்னரும் பெரும்பாலான இடங்களில் இவை இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால் கொடிகள் மோசமான நிலையில் உள்ளன.
எங்கும் பறந்த தேசியக்கொடி
பொதுவாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் சுதந்திர தின பொன்விழாவையொட்டி கடந்த ஆண்டு சுதந்திர தின நாளில் அனைவரும் வீடுகளில் கொடியேற்ற அரசு அழைப்பு விடுத்தது. வழக்கமாக மாலையில் தேசியக்கொடி இறக்கப்படும் நிலையில் இந்த சுதந்திர தினத்திற்கு மட்டும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு இரவு நேரத்திலும் தேசிய கொடி பறப்பதற்கு அரசு சிறப்பு அனுமதி வழங்கியது.
இதனால் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் வீடுகளில் தேசிய கொடியேற்றினர். அதேபோன்று திருப்பூரிலும் வீடு, கடைகள் வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள், ஓட்டல் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை ஏற்றினர். இதனால் எங்கும் தேசியக்கொடி பறந்ததை காண முடிந்தது.
மக்களின் தேசப்பற்று
இவ்வாறு கட்டிடங்களில் கொடி ஏற்றப்பட்ட நிலையில் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, லாரி என அனைத்து வகையான வாகனங்களிலும் தேசியக்கொடிகளை கட்டியபடி மக்கள் வலம் வந்தனர். இன்னும் சொல்லப்போனால், சைக்கிள், மாட்டு வண்டி, தள்ளுவண்டிகளிலும் கூட மூவர்ண கொடியை காண முடிந்தது. நாட்டுக்காக போராடி தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொதுமக்கள் தேசியக்கொடியை சட்டைகளிலும், வீடுகளிலும் இடம்பெற செய்தது மெய்சிலிர்க்க செய்யும் விஷயமாக இருந்தது.
இதற்காக மக்களை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால் தற்போது இந்த தேசியகொடிகள் 6 மாதங்களை கடந்து பறந்து கொண்டிருப்பதால் அவை தற்போது மோசமான நிலையில் உள்ளன.
வெளிறிப்போன கொடிகள்
தேசிய கொடி என்பது நம் நாட்டின் மிகவும் உயரிய விஷயம். இந்த கொடிக்கான வர்ணம், அளவு, அதை கையாளும் விதம், பாதுகாக்கும் விதம், பறக்கவிடுதல் என ஒவ்வொன்றுக்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் தற்போது திருப்பூரில் வீடு, கடைகளில் இருக்கும் பல தேசிய கொடிகள் வெளிறி போய் பொலிவின்றி பறக்கின்றன. சில இடங்களில் கொடிகள் நைந்தும், கிழிந்த நிலையிலும் உள்ளன. இன்னும் பல கொடிகள் மின்கம்பி, மரக்கிைள, செடிகளில் சிக்கி பறக்காமல் உள்ளன.
இது மரபு மீறிய விஷயமாக இருப்பதால் தேசியகொடிக்கான மரியாதையை சிதைப்பதாக உள்ளது. எந்த ஒரு நபரும் தேசிய கொடியை வேண்டுமென்றே இப்படி வைத்திருக்க வாய்ப்பில்லை. தேசப்பற்றுடன் கொடியேற்றிய நம் மக்கள் கொடியை கழற்ற மனமின்றி கூட அப்படியே விட்டிருக்கலாம். ஒரு சிலர் மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த குடியரசு தினத்தில் புதிய கொடியை மாற்றியுள்ளனர். எனவே தேசிய கொடிகள் வீடு, கடைகளில் இருப்பது குறித்து அரசு ஒரு தெளிவான அறிவிப்பை மக்களுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும்.