தேசிய பெண் குழந்தைகள் தின விழா
தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைய சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். முன்னதாக பெண் குழந்தைகள் தின விழா குறித்த உறுதி மொழியை அமைச்சர் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அத்துடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சரும், கலெக்டரும் நட்டனர். விழாவில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி நித்யா, மாவட்ட திட்ட அதிகாரி ரேணுகா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பேபி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும் போது, தமிழகத்தில் விரைவில் பொதுத்தோ்வு வர இருக்கிறது. சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். எப்போதும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகமாக உள்ளது. இந்தமுறை மாணவர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். விலையில்லா புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டில் தாமதம் இன்றி வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். கிராமப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார்.