தேசிய காயகல்ப விருது:ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு
தேசிய காயகல்ப விருதுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனா்.
மத்திய அரசின் காயகல்ப திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேசிய காயகல்ப விருதுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினார்கள். இதில் அரூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான 3 டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் வருகை பதிவு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயாராக உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாராக உள்ளனவா? என்று பார்வையிட்ட அதிகாரிகள், டாக்டர்களிடம் உரிய விளக்கத்தை கேட்டறிந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த மருத்துவக்குழுவினர் கூறும்போது, "தேசிய காயகல்ப விருதுக்கு தமிழகத்தில் 32 அரசு ஆஸ்பத்திரிகளும், 132 தாலுகா ஆஸ்பத்திரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகள் தொடர்பாக மதிப்பெண் வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் ஆஸ்பத்திரிக்கு தேசிய விருது வழங்கப்படும். முதலிடம் பெறும் ஆஸ்பத்திரிக்கு ரூ.30 லட்சமும், 2-வது இடம் பெறும் ஆஸ்பத்திரிக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும். சுற்றுப்புற தூய்மை, மின் சிக்கனம் தொடர்பாக நடப்பாண்டு புதிய விருதும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் முதலிடம் பெறும் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது", என்றனர். இந்த ஆய்வின்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.