தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி: தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி சாதனை
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி சாதனை படைத்துள்ளது.
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி சாதனை படைத்துள்ளது.
இறுதிப்போட்டி
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், ஒடிசா, பீகார், கேரளா, பாண்டிச்சேரி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட பல அணிகள் பங்கேற்றது. ராஜ்மகேஷ்வரன் தலைமையிலான தமிழக அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில், தமிழகம் பாண்டிச்சேரி அணிகள் மோதின. அந்த போட்டியில், தமிழக அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்த தொடரில் தமிழக அணி வீரர் சன்மேக்கர் 258 ரன்கள் எடுத்து சிறந்த மட்டை வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தமிழக அணி பந்து வீச்சாளர்கள் கோபிநாத், முத்துராசா தலா 6 விக்கெட்களை வீழ்த்தினர். தமிழக அணி முதல்முறையாக கோப்பையை வென்று வெற்றி வாகை சூடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
இதற்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தது. இதில், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க சேர்மன் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ரமேஷ்கண்ணன், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத் தலைவர் சூரியபிரகாஷ், இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவக்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க செயலாளர் வீரராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தமிழக வீரர்களை வாழ்த்தினர்.
கோரிக்கை
இதில், சிவக்குமார், ராஜ்மகேஷ், சன்முகர், சந்தோஷ்குமார், செந்தில், கோபிநாத், முகமது இப்ராகிம் ஆகியோர் இந்திய அணிக்கும் தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பும், ஊக்கத்தொகையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.