தேசிய அளவிலான கருத்தரங்கம்
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தென்மண்டல அமைப்பின் நிதி உதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. 'சமூக அறிவியலில் நவீன ஆராய்ச்சி மற்றும் புள்ளி விவர ஆய்வு முறைகள்' என்ற தலைப்பில் நடக்கும் இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை தாங்கி பேசினார். தாளாளர் ரெத்தினம் முன்னிலை வகித்து பேசினார். கல்லூரி இயக்குனர் துரைரெத்தினம், நிர்வாகி பொன்னையா ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக இயக்குனர் சுதாகர் ரெட்டி சமூக அறிவியலின் நவீன ஆராய்ச்சி முறைகள் குறித்து விளக்கி பேசியதுடன் அதுதொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தார். பின்னர் தொழில்நுட்ப அலுவலர் ஜேக்கப் காலே பேசுகையில், ஆய்வுத்துறை சார்ந்த தலைப்பை எவ்வாறு தேர்வு செய்வது, தரவுகளை பிரித்து எவ்வாறு வகைப்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அருண் செய்திருந்தார். முன்னதாக பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் சுஜாதா நன்றி கூறினார். கருத்தரங்கம் நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.