26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-
லோக் அதாலத்
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் நிகழ்ச்சி) நடைபெற உள்ளது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இதனால் பணம், காலம் மிச்சமாகிறது.
மேலும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள உறவுகள் மேம்படுகிறது, வழக்கில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப கிடைக்கப்படுகிறது. இந்த வருடத்தின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் ஆகும். இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் 11 அமர்வுகளில் நடைபெறுகிறது.
இதற்கான 10 முன் அமர்வுகள் கோர்ட்டுகளில் நடைபெற்றுள்ளது. இதில் 558 வழக்குகள் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ.1 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 300 இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் இதுவரை 3 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்படவுள்ளது.
வங்கி வாராக்கடன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள வாராக்கடன் வழக்குகள் மற்றும் தொழிலாளர்கள் இழப்பீடு, சிறு குற்ற வழக்குகள், குடும்ப நலவழக்குகள், சிவில் வழக்குகள் இந்த லோக் அதாலத் நிகழ்வில் எடுத்து நடத்தப்பட உள்ளது. அதில் பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு தங்களின் சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பட்டியலில் கண்ட வழக்குகளில் தீர்வு கண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.