தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
கதிரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது தாய் - சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி அதன் மூலம் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் அருகே கதிரம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர்கள் அனுராக் மிட்டல், குஷூமா தலைமையிலான தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வுசெய்தனர். அவர்களை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார்.
இக்குழுவினர் ஒரு மாதத்துக்கு எத்தனை பிரசவங்கள் பார்க்கப்படுகிறது, ரத்த வங்கி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா, தரச்சான்று மருத்துவ அலுவலர் சங்கரி, தாய்-சேய் நல மருத்துவ அலுவலர் பியூலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.