அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு
நெல்லை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல்லை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
தேசிய தர உறுதி சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள், நோயாளிகளின் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
அவற்றுக்கு தேசிய தர நிர்ணய சான்று வழங்கப்படுவதோடு அத்தகைய சுகாதார நிலையத்திற்கு கூடுதல் வசதிகளை செய்ய ஊக்கத்தொகை மற்றும் கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய தர நிர்ணய குழு
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட்மாநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்வதற்காக தேசிய தர நிர்ணய குழுவின் டெல்லி அதிகாரிகள் டாக்டர் மகேஷ் சச்தேவா (ஜெய்ப்பூர்), விந்த்பிரகாஷ் (லக்னோ) ஆகியோர் நேற்று வந்தனர்.
அவர்களுக்கு தேவையான தகவல்களை நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் எடுத்து கூறினார். இந்த குழுவினர் அங்குள்ள நோயாளிக்கு அளிக்கப்படுகின்ற மருத்துவ வசதிகள், டாக்டர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கான வசதிகள், ஆய்வக வசதி, ஆன்லைன் டிஜிட்டல் சிஸ்டம், சுகாதார நிலையத்தை சுற்றி காணப்படும் மரம், செடி உள்ளிட்ட இயற்கை சூழல், தூய்மை பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
டெங்கு பரிசோதனை
டெங்கு காய்ச்சல் பற்றி பரிசோதனை செய்வதற்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் "எலிசா பரிசோதனை" கட்டாயம் செய்ய வேண்டும் என்றும், காய்ச்சலை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.