விழுப்புரத்தில்தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில்தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:34+05:30)

விழுப்புரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சி விழுப்புரம் நான்கு முனை சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் ஜனநாயக கடமை குறித்தும், வாக்களிப்பதினால் ஏற்படும் நன்மைகள், பொறுப்புகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலம் நடைபெறுகிறது.

இணையவழியில் பெயர் சேர்த்தல்

மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்திட வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும், மேலும் இணைய வழி மூலமாக பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தும் இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

விழுப்புரம் நான்கு முனை சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

இதில் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான வாகனத்தில் சென்றபடி வந்தனர்.


Next Story