இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி


இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி
x

திண்டுக்கல்லில், இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஓம்சாந்தி மேல்நிலைப்பள்ளியில் இயற்கை விவசாய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல்விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் போன்றவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுபொருட்கள், பாரம்பரிய நெல், தானிய விதைகள், காய்கறி விதைகள், விவசாய கருவிகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சியை கலெக்டர் விசாகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதையடுத்து நடந்த கருத்தரங்கில் சென்னை தலைமை செயலகத்தின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை பொறியாளர் பிரிட்டோராஜ், வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி மணிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிபாரதி, ஓம்சாந்தி மேல்நிலைப்பள்ளி தாளாளர் இ.என்.பழனிசாமி, நாட்டாண்மை காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.


Next Story