பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
கோத்தகிரி அருகே பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி, ஜூன்
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து பழங்குடியின விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் கரிக்கையூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கி, தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொழில்நுட்ப அலுவலர் ரஞ்சித் மீன் அமிலம், ஜீவாமிர்தம் ஆகிய இயற்கை வேளாண் இடுபொருட்கள் மற்றும் அதன் தயாரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை செய்யும் மஞ்சள் ஒட்டுபொறி, இனக்கவர்ச்சி பொறி மற்றும் வேப்பெண்ணெய் கரைசலின் பயன்பாடு குறித்து விளக்கினார். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட்டது.