ஆற்றங்கரைகளை வலுப்படுத்த சமூக காடு வளர்க்க வேண்டும்- இயற்கை ஆர்வலர்கள்


ஆற்றங்கரைகளை வலுப்படுத்த சமூக காடு வளர்க்க வேண்டும்- இயற்கை ஆர்வலர்கள்
x
தினத்தந்தி 12 May 2023 12:45 AM IST (Updated: 12 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் உள்ள ஆற்றங்கரைகளை வலுப்படுத்த சமூக காடு வளர்க்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் பகுதியில் உள்ள ஆற்றங்கரைகளை வலுப்படுத்த சமூக காடு வளர்க்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக காடுகள்

நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வழியாக முடிகொண்டான் ஆறு, அரசலாறு, வளப்பாறு, திருமலைராஜன் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன. இந்த ஆற்றங்கரைகளில் மரக்கன்றுகள் நட்டு, சமூக காடுகளை உருவாக்குவதன் மூலமாக மாசுபடுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமூக காடுகள் மூலமாக நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க முடியும் என்றும், ஆற்றங்கரைகளை வலுப்படுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மேலும் கூறியதாவது:-

வாழைத்தோட்டம்

ஆற்றங்கரைகளில் பொதுப்பணித்துறை கரைகாவலர்களை கொண்டு சமூக காடு வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனால் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கலாம். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றங்கரைகளில், கரைகளை பலப்படுத்துவதற்காக, மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது.

பெரும்பாலான இடங்களில், விளைச்சல் தரக்கூடிய தென்னை, பனை, மா, புளியமரம் ஆகிய மரங்கள் வளர்க்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டன. மேலும் ஆற்றங்கரைகளில் வாழைத்தோட்டம், வெற்றிலை கொடிக்கால் அமைத்திருந்தனர். ஆற்றங்கரை பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமும் வசூலித்து வந்தனர்.

தற்போது ஆற்றங்கரைகளில் மரங்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் மழை, வெள்ள காலங்களில் ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது.

பலன் தரும் மரங்கள்

எனவே பொதுப்பணித்துறையின் மூலம் ஆற்றங்கரைகளை வலுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சமூக காடுகளை வளர்க்க வேண்டும். இதில் பலன் தரும் மரங்களை வளர்த்தால் அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

இதற்கு பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story