இயற்கை உரம் தயாரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்


இயற்கை உரம் தயாரிப்பு பணிகளை   அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
x
திருப்பூர்


உடுமலை பகுதி ஊராட்சிகளில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயற்கை உரங்கள்

வானம் பார்த்த பூமியை உயிர்ப்புத்தன்மை உடையதாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை காலத்தில் நிலத்தில் இடப்படுகின்ற வேப்பம் புண்ணாக்கு, மாட்டுச்சாணம், கோழி எச்சம், பட்டி அடைத்தல் முறையில் ஆடுகளின் புழுக்கை, சிறுநீர், வாத்துக்கோழியின் எச்சம் போன்றவை மழைப்பொழிவுக்கு பின்பு பணியை தொடங்கி விடுகிறது. இதனால் நிலத்தில் மண்புழுக்கள் விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கருத்தரிதலுக்கு பக்குவப்பட்ட நிலத்தை வேப்பன் மற்றும் கருவேலான் மரத்தின் மூலம் செய்யப்பட்ட ஏர் கலப்பையை கொண்டு உழவு செய்வார் விவசாயி.இதனால் நிலமும் குளிர்ச்சியாவதுடன் விவசாயத்திற்கு எதிரான பூச்சியினங்கள் களைகள் இயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது

மண் வளம்

அதன் பின்பு நிலத்தில் இடப்படுகின்ற ஒவ்வொரு நாட்டு விதையும் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போன்று பூச்சி தாக்குதலை எதிர்கொண்டு அதிக விளைச்சலை கொடுப்பதற்கு தயாராகி விடுகிறது.

அவற்றை பக்குவப்படுத்தி பராமரிப்பு செய்து எதிர்பார்த்த அளவு விளைச்சலை ஈட்டி விடுவார் விவசாயி. இது இயற்கையோடு ஒன்றிணைந்த விவசாயம் ஆகும். இதனால் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றதுடன் இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு அதிகரித்தது.

இயற்கை உரம் தயாரிப்பு பணிகளை

அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக விவசாயத்தில் விஞ்ஞானம் நுழைந்தது. ஹைப்பிரட் விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உழவுக்கு எந்திரங்களின் வரவு முதலில் விவசாயிக்கு இனிப்பை தந்தாலும் பின்பு கசப்பையே தரும் நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை முறையால் நிலமும் வெப்ப மாயமானது.அதை தாங்க முடியாமல் உழவனின் நண்பனான மண்புழு மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துவிட்டது.

இதனால் நிலம் மலடாகி முழுமையாக கருத்தரிக்க முடியாத நிலையே தற்போது உள்ளது. எந்த விதையை நடவு செய்தாலும் அது முழுமையாக முளைப்பதில்லை. மீண்டும் அதில் புதிதாக விதைகளை நடவு செய்ய வேண்டிய நிலையே உள்ளது. உயிர்ப்பு தன்மை இல்லாத வெப்பம் நிறைந்த நிலத்தில் விளைந்த பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி கூலியாட்கள், தண்ணீர் பற்றாக்குறை இடு பொருட்கள் விலை உயர்வு, விற்பனை செய்வதில் உள்ள இடர்பாடுகள், இடைத்தரகர்கள் ஆதிக்கம் என விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இந்த சூழலில்தான் இயற்கை முறையில் விவசாயம் புத்துயிர் பெறச் செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல் படியாக மண்புழு உரத்தை இட்டு நிலத்தை உயிர்ப்புதன்மை பெறச் செய்வதுதான். முறையான வழிகாட்டல் இல்லாதலால் அதில் ஒரு சில நபர்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் வீடுகளில் எடுக்கப்படுகின்ற காய்கறி, உணவு மற்றும் மக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் அந்தத் திட்டம் முறையாக கண்காணிக்கப்படாததால் காட்சிப் பொருளாக மாறி உள்ளது.இதனால் விவசாயம் இயற்கை முறைக்கு மாறுவது தடை பெற்றுள்ளது. அத்துடன் அவை தொடங்கப்பட்டதற்கான நோக்கமும் வீணாகி வருகிறது. எனவே உடுமலை பகுதி ஊராட்சிகளில் தொடங்கப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story