திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவிலில் நவராத்திரி கொலுவிழா
உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளம் கரைப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில்.
இந்த கோவிலில் நவராத்திரி கொலுவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதேபோன்று தினசரி காலை10மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
நாள்தோறும் மாலையில், பத்மாவதி தாயார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி, சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்புறப்பாடு (உலா) நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி நேற்று பிரம்ம சாரனி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்புறப்பாடு (உலா) நிகழ்ச்சி நடந்தது.
மற்றொரு சப்பரத்தில் வேங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் விழாவையொட்டி தினசரி மாலை, கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நேற்று மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.