நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
கடலூரில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தயார் செய்யப்பட்ட பொம்மைகள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடலூர்:
சிவனுக்கு மகா சிவராத்திரி போல் ஆதிபராசக்திக்கு உகந்த ராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி ஆகும். மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றிய பண்டகாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கினான்.
அவனை அழிக்க தேவி 9 இரவுகளில் வெவ்வேறு உருவங்களை கொண்டு போரிட்டு 10-வது நாள் அசுரனை வதம் செய்தாள். தேவி அசுரனை அழிக்க போராடிய இந்த 9 ராத்திரிகளே நவராத்திரி என்றும், அசுரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொலு பொம்மைகள்
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த விழாவை கடலூர் மாவட்ட மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். நவராத்திரி அன்று தங்கள் வீடுகளில் 9 படிகளில் பல விதமான சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலு. இதில் கிருஷ்ணர், முருகன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் பொம்மைகள் வைக்கப்படும்.
நவராத்திரி விழாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொம்மைகளுக்கு இறுதி வர்ணம் பூசும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தயார் செய்யப்பட்ட பொம்மைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிப்பாளையத்திலும் நவராத்திரி கொலு பொம்மைகள் 3 தலைமுறைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதை குடிசை தொழிலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
இது பற்றி வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் கார்த்திகேயன் கூறியதாவது:-
யோகாசனம்
கொலு பொம்மைகளை களி மண்ணாலும், காகித கூழ் மூலமாகவும் தயாரிக்கிறோம். எங்களிடம் சரஸ்வதி, ராமர், சீதை, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், பெருமாள், விநாயகர், லஷ்மி என 70 வகையான பொம்மைகளை தயாரிக்கிறோம். புது வரவாக யோகாசனம் செய்வது போல் பொம்மைகள் தயாரித்து உள்ளோம்.
விவசாயம் செய்வது போன்றும் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி
நாங்கள் தயாரிக்கும் கொலு பொம்மைகளை உள்ளூர் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம். தவிர சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். முன்பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் பொம்மைகள் தயார் செய்து அனுப்பி வருகிறோம்.
ராமாயணம், மகா பாரதத்தில் உள்ள கதைகளுக்கு ஏற்ப பொம்மைகளும் உள்ளது. ஒரு செட் பொம்மைகள் ரூ.300 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 இன்ச் முதல் 3 அடி வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.