நாசரேத் பிரகாசபுரம் கெபியில் மாதா சிலை உடைப்பு:கிறிஸ்தவர்கள் சாலைமறியல்
நாசரேத் பிரகாசபுரம் கெபியில் மாதா சிலையை மர்மநபர்களால் உடைக்கப்பட்டதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாசரேத்:
நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலய கெபியில், மாதா சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. இதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாதா ஆலயம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரேட்டில் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆலயத்தின் சுற்றுச்சுவர் களிமண்ணால் ஆனதினால் அதை இடித்து புதிதாக சுற்றுசுவரில் உள்ள கெபியில் மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது.
சிலை உடைப்பு
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கெபியில் உள்ள மாதா சிலை உடைக்கப்பட்டு, அதன் முகப்பு கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருள் தலைமையில் நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த திருச்சபை மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து பிரகாசபுரம் பங்கு தந்தை சலேட் ஜெரால்டு கூறுகையில், சமூக விரோதிகள் சனிக்கிழமை இரவு மாதா சொரூபத்தை உடைத்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருப்பதை சீர்குலைக்க வேண்டும் என்றே இதனை மர்மநபர்கள் செய்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் இந்து, கிறிஸ்தவர்கள் என அனைவரும் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருந்து வருகின்றனர். இதை சீர்குலைக்க நடந்த செயலாகவே தெரிகிறது. திட்டமிட்டு வேண்டும் என்றே செய்த செயலாக நாங்கள் பார்க்கிறோம், என்றார்.
மாதா சிலை உடைக்கப்பட்ட ஆலயம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.