துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய, மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு
கும்பகோணம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை என்.சி.சி. கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் மன்னார்குடி மன்னை நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர் சிவா 1 வெள்ளி பதக்கத்தை வென்றார். இதே போல் மதுரை மாவட்டம் இடைப்பட்டியில் 48-வது மாநில அளவிலான என்.சி.சி. கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 8 மண்டலங்களில் இருந்து 860 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மண்டலத்திலிருந்து பங்கேற்ற 11 மாணவ, மாணவிகளில், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி மாணவி வித்யாஸ்ரீ, 6 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். தேசிய மற்றும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களை வென்ற 2 பேரையும் கும்பகோணம் 8-வது பட்டாலியன் கர்னல் சந்திரசேகரன், சுபேதார் மேஜர் பிரைட் மற்றும் என்.சி.சி. அலுவலர்கள் நேற்று நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பரிசு தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.