அம்மாபேட்டை அருகே25 கோழிகளை கடித்துக்கொன்ற தெருநாய்கள்;பொதுமக்கள் அச்சம்
அம்மாபேட்டை அருகே 25 கோழிகளை தெருநாய்கள் கடித்துக்கொன்று உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே 25 கோழிகளை தெருநாய்கள் கடித்துக்கொன்று உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இரவு நேரங்களில்...
அம்மாபேட்டை அருகே குதிரைக்கல்மேடு, பெரியார்நகர், முத்து கவுண்டன்புதூர், காடப்பநல்லூர், கரட்டுக்கொட்டாய், வெற்றிலைக்காரன் தோட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் வாத்துகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் வீடுகளை ஒட்டியுள்ள ஆட்டுப்பட்டிகள் மற்றும் கோழி கூண்டுகளுக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவருடைய 8 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று உள்ளன. இதேபோல் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் ஏராளமான ஆடுகள், கோழிகள், வாத்துகள் போன்றவற்றையும் கடித்து கொன்று உள்ளன.
25 கோழிகள்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குதிரைக்கல்மேடு பெரியார் நகரை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வளர்த்து வந்த 25 கோழிகளை தெருநாய்கள் கடித்து கொன்று உள்ளன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'ஆடு, மாடு, கோழி என ஏராளமான கால்நடைகளை தெருநாய்கள் கடித்து கொன்று உள்ளன. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெரு நாய்களுக்கு பயந்து பலர் தங்களுடைய கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மனிதர்களையும் இந்த தெருநாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே ஏதேனும் பெரிய அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்து உள்ளனர்.