அந்தியூர் அருகேகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்அரசு பஸ் சிறைபிடிப்பு


அந்தியூர் அருகேகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்அரசு பஸ் சிறைபிடிப்பு
x

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு

அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் சிறைபிடிப்பு- சாலை மறியல்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி அந்தியூர் காலனி. இங்குள்ளவர்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்டி அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது. மேலும் அங்குள்ளவர்களுக்கு நேரிடையாக குடிநீர் குழாய் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 8 மணி அளவில் அங்குள்ள ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அந்தியூரில் இருந்து மலைக்கருப்புசாமி கோவிலுக்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் குழாய்களில் நேரிடையாக தண்ணீர் வருகிறது. அதுவும் இரவு, பகல் என மாறி மாறி வருகிறது. இங்குள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். வேலைக்கு சென்ற பின்னர் தண்ணீர் வினியோகம் செய்தால் எப்படி பிடிப்பது. இரவில் நேரம் கடந்து வினியோகம் செய்வதால் நாங்கள் எப்படி தண்ணீரை பிடிக்க முடியும். எனவே எங்களுக்கு முறையாக குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும்,' என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு போலீசார் கூறுகையில், 'உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், அரசு பஸ்சை விடுவித்ததுடன், தங்களுடைய போராட்டத்தையும் கைவிட்டு 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story