ஆண்டிப்பட்டி அருகேபெண் கேட்டு தொந்தரவு செய்ததால் வாலிபர் அடித்துக்கொலை:தாய்மாமன் கைது
ஆண்டிப்பட்டி அருகே பெண் கேட்டு தொந்தரவு செய்ததால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
பெண் கேட்டு தொந்தரவு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). விவசாயி. இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது அக்காள் மகன் நாகபிரபு (27). நாகபிரபு, கருப்பசாமியின் மகளுக்கு மாமன் உறவு என்பதால் அந்த பெண்ணிடம் அவர் அடிக்கடி விளையாட்டாக பேசி வந்தார்.
மேலும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டும், அந்த பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்தும் வந்தார். ஆனால் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததால் நாகபிரபுவுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க கருப்பசாமி மறுத்துவிட்டார்.
மண் வெட்டியால் தாக்கினார்
இந்த நிலையில் கருப்பசாமியின் மகள், நாகபிரபு அடிக்கடி தொல்லை செய்வதாக தந்தையிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி நேற்று முன்தினம் இரவு நாகபிரபுவிடம் தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இ்டையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கருப்பசாமி தான் வைத்திருந்த சிறிய மண்வெட்டி கணையால் நாகபிரபுவை தாக்கினார். மேலும் அங்கு கிடந்த கல்லை எடுத்தும் அவர் மீது எறிந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நாகபிரபு தாக்கியதில் கருப்பசாமியின் தலையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மண் வெட்டி கணையால் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நாகபிரபு மற்றும் காயமடைந்த கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் சாவு
அங்கிருந்து நாகபிரபு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் முஜிபூர் ரகுமான் வழக்குப்பதிந்து கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெண் கேட்டு தொந்தரவு செய்ததால் அக்காள் மகனையே தாய்மாமன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.