ஆண்டிப்பட்டி அருகேமாவட்ட மருந்து கிட்டங்கியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆண்டிப்பட்டி அருகே மாவட்ட மருந்து கிட்டங்கியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் மாவட்ட மருந்து கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மருந்து கிட்டங்கியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் விவரம், அதற்கான பதிவேடுகள், மருந்துகளில் அச்சடிக்கப்பட்ட காலாவதி காலம், கிட்டங்கியின் செயல்பாடுகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள ரேஷன் கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல், ஆண்டிப்பட்டி மற்றும் தேனியில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.