ஆண்டிப்பட்டி அருகே மூச்சுத்திணறி சிறை கைதி சாவு
ஆண்டிப்பட்டி அருகே மூச்சுத்திணறி சிறை கைதி பரிதாபமாக இறந்தார்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கடந்த 2010-ம் ஆண்டு இவர், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தேனி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் விசாரணைக்காக நாகராஜ் ஆஜராகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகராஜ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த 9-ந்தேதி நாகராஜை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த நாகராஜிற்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.