அறச்சலூர் அருகே விபத்தில் தொழிலாளி சாவு
விபத்தில் தொழிலாளி சாவு
அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. அண்ணன் மகன் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் பிறவியிலேயே வாய் பேச இயலாமலும், காது கேட்காமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் முருகேசன் நேற்று முன்தினம் மதியம் லிங்காத்தா கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக முருகேசன் மீது மோதியது. விபத்து நடந்ததும் சரக்கு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பித்து ஓடிவிட்டார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு முருகேசன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய சரக்கு வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.