ஆறுமுகநேரி அருகே பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்: 6 பேருக்கு வலைவீச்சு
ஆறுமுகநேரி அருகே பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
நாசரேத் டேனியல் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 51). தனியார் பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று மாலையில் வழக்கம்போல் நெல்லையில் இருந்து ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பஸ் முந்தி சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் மறித்து டிரைவர் ஸ்டீபனை அவதூறாக பேசினார். பின்னர் அந்த பஸ் ஆறுமுகநேரி பேயன்விளை வழியாக சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ், வசந்த் உள்ளிட்ட சிலர் பஸ்சை வழிமறித்து டிரைவர் ஸ்டீபனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பஸ் டிரைவர் ஸ்டீபன் பயணிகளை திருச்செந்தூரில் இறக்கி விட்ட பின்னர், அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹரிதாஸ், வசந்த் உள்ளிட்ட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.